செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தனக்கும் கரூர் துயரச் சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் விஜய் பேசினார். துயரச் சம்பவத்திற்கு துளிகூட வருத்தம் தெரிவிக்கவில்லை விஜய். இதுதான் தமிழக அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் ‘அன்புள்ள விஜய்க்கு….’ என்ற தலைப்பில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘அந்த கூட்டத்தில் சிக்கியதில் உங்கள் மகனோ மகளோ ஒருவராக இருந்திருந்தால் களத்தில் இறங்கி காப்பாற்றியிருப்பீர்களா இல்லை களத்தில் இருந்து கம்பி நீட்டியிருப்பீர்களா..?

உங்களை நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு சந்திப்பதாக உறுதி அளித்த ஒருவர் அதே எட்டே முக்கால் மணிக்குத் தான் சென்னையில் இருந்தே வீட்டை விட்டு புறப்படுவதாக அறிந்தால் மகிழ்வீர்களா இல்லை மனம் கொதிப்பீர்களா..?

ஒருவரை சந்திக்க சென்று சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் உங்களுக்கு அங்கே குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கூட தரவில்லை என்றால் அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்..?

நெரிசல் மிக்க கூட்டத்துக்குள் ஒருவராக நீங்கள் நின்று கொண்டிருக்கும் போதுநீங்கள் அங்கே காண விரும்பிய அந்த நபர் வாகனத்தில் உள்ளேயே ஒருமணி நேரமாக லைட்டை ஆஃப் கொண்டு உட்கார்ந்திருந்தாலோ அல்லது லைட்டை போட்டும் ஆஃப்செய்து கொண்டும் சிரித்தபடி அமர்ந்திருந்தாலோ அது கண்டு நீங்கள் சிலாகிப்பீர்களா இல்லை எரிச்சல் அடைவீர்களா..?

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு துக்கமோ இழப்போ ஏற்பட்டதாக கற்பனைக்கு வைத்துக் கொள்வோம். அதற்காக உங்களுக்கு ஆறுதல் சொல்ல நட்சத்திர விடுதிக்கு ஒன்றுக்கு வந்து என் ஆறுதலை பெற்றுச் செல்லுங்கள் என ஒருவர் உங்களை அழைத்தால் அதனை ஏற்பீர்களா இல்லை கோபம் அடைவீர்களா..?

இது போல கரூர் சம்பவம் தொடங்கி உங்களது அனைத்து சுற்றுப் பயணங்களிலும் டிரான்ஸ் பார்மர்களில் மரக் கிளைகளில் ஏறி நின்று விபரீதங்களில் ஈடுபட்ட அந்த ஊரார் வீட்டு பிள்ளைகளில் உங்கள் பிள்ளையும் ஒருவராக இருந்திருந்தால் களிப்புற்று கடந்து போயிருப்பீங்களா இல்லை கண்டித்து திருத்தியிருப்பீங்களா..?

தயவு கூர்ந்தது இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு செயலிலும் மனச்சாட்சியோடு உங்களை நீங்கள் பொருத்திப் பாருங்கள்…

அதுவும்… அன்று ஆர்வமிகுதியால் உங்களிடம் கைகுலுக்க அந்த”ரேம்ப் வாக்” நடைபாதையின் மீது ஏறி ஓடிவந்து உங்கள் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞனின் தாய் தந்தையாக உங்களை கற்பனை செய்து கொண்டு ….

ஆக சமூகத்தை வெறிப்படுத்துவது அல்ல தலைமைத்துவம்அதனை சினிமாவில் நீங்க நிறையவே செஞ்சிட்டூங்க..!

மாறாக நெறிப்படுத்துவது தான் தலைமைப்பண்பு முடிஞ்சா அதை செய்யப் பாருங்க…

அம்புட்டுத்தான்’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal