பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும் காத்திருந்து சந்தித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் சந்திக்காததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருகிறது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது
பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘‘சின்னம்மா எங்களோடு வந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தாமதமாக புறப்பட்டதால் அவரால் சரியான நேரத்திற்கு இங்கு வரமுடியவில்லை. அவர்கள் மனதால் எங்களுடன் எப்போதும் இருப்பார்கள். ஏனென்றால், துரோகம் வீழ்த்தப்பட வேண்டும்” என்று சமாளித்தார்.
சசிகலாவை சந்திக்காமல் தவிர்ப்பது ஏன் என நேற்று மதுரை சோழவந்தானில் தினகரனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘சின்னம்மா என்பதை தாண்டி அவர்கள் எனக்கு சித்தி. வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்’’ என்றார்.
தினகரனும் சசிகலாவும் பொதுவெளியில் சந்தித்துப் பேசுவதை தவிர்ப்பது ஏன் என்பது அமமுகவினருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. உள் விவகாரங்களை அறிந்த அமமுக நிர்வாகிகளோ, ‘‘சின்னம்மா சிறையில் இருந்த சமயத்தில் தினகரன் அமமுகவை தொடங்கியதில் இருவருக்குள்ளும் ஆரம்பத்தில் சில வருத்தங்கள் இருந்தன. ஆனால், தற்போது அதெல்லாம் சரியாகிவிட்டது. சீக்கிரமே பொதுவெளியில் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள்” என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி, ஓ-பிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் கைகோர்த்த பிறகும், சசிகலா இவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள் அ.ம.மு.க.வில் இருந்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த மூத்த நிர்வாகிகள்.
இது பற்றி மேலும் அவர்களிடம் பேசியபோது, ‘‘சார், சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பனை அ.ம.மு.க. மூலமாக டி.டி.வி. தினகரன்தான் கொடுத்தார். இதனை மகிழ்ச்சியுடன் சசிகலா ஏற்றுக்கொண்டார்.
ஆனால், சசிகலா சிறையில் இருக்கும்போது, அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதோடு, அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். இதற்கு சசிகலா முழுமையாக ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்த்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், சசிகலா அ.ம.மு.க.விற்கு ஆதரவு கொடுக்கவில்லை.
தவிர, டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையயான உறவே சரியில்லாத காரணத்தால்தான், அ.ம.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்யைடன் கைகோர்த்தாலும், இவர்களுடன் சசிகலா கைகோர்க்க வாய்ப்பே இல்லை. அந்தளவிற்கு டி.டி.வி.க்கும், சசிகலாவிற்கும் இடையோ உள்ளுட பனிப்போர் நீடித்து வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.
