அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையனை வைத்து மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு சோதாரத்தை ஏற்படுத்த தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வின் மேற்கு மண்டல வியூகம் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன்பின் செங்கோட்டையனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், ‘‘துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுத்தால், அதனை பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமியே தகுதியானவர்’’ என்று தெரிவித்தார். பின் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது கொங்கு மண்டலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது.

செங்கோட்டையன் நீக்கத்திற்கு முக்கிய காரணமே, தலைமை பலவீனமாக இருக்கிறது என்று யாரும் கூறிவிடக் கூடாது என்பதற்காக தான். அதேபோல் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனை வைத்து சில மாஜிக்கள் பல்ஸ் பார்த்திருக்கின்றனர். அவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இருந்தாலும் செங்கோட்டையனின் நீக்கம் நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு தான் என்றே தெரிகிறது. செங்கோட்டையனுக்கு பெரியளவில் ஆதரவாளர்கள் இல்லையென்றாலும், அதிமுகவுக்கு வலிமை வாய்ந்த மேற்கு மண்டலத்தில் சில நெகட்டிவ் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளால் செங்கோட்டையனை எதிர்த்து செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 53 ஆண்டுகளாக செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட மக்களுக்கு பரீட்சியமான முகம் என்பதால், கணிசமான வாக்குகள் அதிமுகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மாவட்டம் தீவிரமாக பணியாற்றி வருவதால், இந்த தேர்தலில் திமுக செங்கோட்டையன் பிரச்சனையை வைத்து கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற முடிவு எடுத்து வருகிறதாம்.
ஏற்கனவே செங்கோட்டையனும் தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், செங்கோட்டையன் மூலமாக அ.தி.மு.க.வுக்கு எப்படி சேதாரத்தை ஏற்படுத்த முடியும் என செந்தில்பாலாஜி, முத்துசாமி, தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் மூலமாக தி.மு.க. வியூகம் வகுக்கத் தொடங்கியிருக்கிறது’’ என்றனர்.
மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு செங்கோட்டையனால் சேதாரத்தை ஏற்படுத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
