‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் தி.மு.க.வுடன் செங்கோட்டையன் வைத்திருக்கும் ரகசிய உறவையும்’ எடப்பாடி பழனிசாமி புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அத்திக்கடவு -& அவிநாசி திட்டத்தில் 30 சதவிகிதம் கோபி தொகுதியில் உள்ள ஏரிகளை எல்லாம் நிரப்புகின்ற திட்டம். அப்படியிருக்கின்றபோது வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான கருத்தைச் சொன்னார். அம்மா மற்றும் எம்ஜிஆரின் உருவப்படங்கள் இடம்பெறாத காரணத்தினால் அதில் கலந்துகொள்ளவில்லை என்றார். அது கட்சி சார்ந்த நிகழ்ச்சியல்ல, பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதனை ஒருங்கிணைப்பு செய்தனர். அவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் அவர் பங்கேற்கவில்லை.

அதே செங்கோட்டையன் இலவச சைக்கிள் விநியோகிக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் (அந்த புகைப்படங்களைக் காட்டுகிறார்). அதில் புரட்சித் தலைவர், அம்மா படங்கள் இல்லை, கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் தான் இருக்கிறது. ஆக அப்போதிருந்தே பி டீம் வேலையை செங்கோட்டையன் தொடங்கிவிட்டார். உண்மை வெளிவந்துவிட்டது.

இணைப்பு பற்றி பேசவேண்டும் என்றார். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து சில வரிகளைப் படித்துக் காட்டுகிறேன்.

‘அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கட்சி விரோதச் செயல்களுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கழகத்தின் நன்மை கருதி, சட்டதிட்ட விதி 35ன் படி ஓபிஎஸ் அவர்களை பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைப்பது என முடிவெடுக்கப்படுகிறது. அவரோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவரோடு சேர்த்து இன்னும் சிலர் நீக்கப்பட்டனர். பின்னர் தீர்மான இறுதியில், கழக உடன்பிறப்புகள் மேற்கண்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் சொல்லவில்லை, 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

பொதுக்குழு எடுக்கும் முடிவு இறுதியானது, அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதெல்லாம் தெரியாதா அவருக்கு? நீக்கப்பட்டவர்களோடு இணைந்து செயல்பட்டதால் தலைமை இன்று நடவடிக்கை எடுத்திருக்கிறது. நான் மட்டும் எடுக்கவில்லை, மூத்த தலைவர்களுடன் கலந்துபேசி சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எப்போது பார்த்தாலும் அம்மா விசுவாசி என்கிறார், அப்படியிருந்தால் ஏன் அம்மா அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்தார்?

நான் முதல்வரான பின்னர்தான் அமைச்சரவையில் இடம் கொடுத்தேன். நான் எழுதிகொடுத்து கையெழுத்துப் போட்ட பின்னர்தான் கவர்னர் மூலம் வாய்ப்பு கிடைத்தது. மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் அம்மா எடுத்துவிட்டார், நான் இருக்கும்போதுதான் அப்பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இப்படி உண்மைக்கு மாறான செய்தி வெளியிடுகிறார்.

டிடிவி.தினகரன் 19-&12&-2012 அன்று அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். அம்மா இருக்கின்ற வரை 10 ஆண்டுகாலம் செனனைக்கு வரவில்லை. வந்தாலும் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். அம்மா இறந்த பின்னர்தான் சசிகலா அவர்களால் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு பெற்றார். அப்போதுகூட கட்சியில் இணைந்து வாங்கவில்லை, இணைக்காமலேயே நேரடியாக பொறுப்புக் கொடுத்துவிட்டார்.

நீக்கப்பட்ட ஒருவருக்குப் பதவி கொடுக்கப்பட்டது. அம்மா இருக்கும்போதே கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால்தான் நீக்கப்பட்டார். 10 ஆண்டுகாலம் வனவாசம் போனவர் எங்களைப் பற்றிப் பேசுகிறார். இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால்தான் கழக உறுப்பினர்கள் எனக்குப் பொறுப்புக் கொடுத்துள்ளனர். இவர்களைப் போல அவ்வப்போது பச்சோந்தி போல மாறுவது கிடையாது.

எப்பொழுதுமே திமுகவை எதிர்த்து சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டத்திலும் பேசியதே கிடையாது. ஆக திமுகவுக்கு பி டீமாக இருப்பது நிரூபணமானது. இதை யாரும் மறைக்க முடியாது. அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான் இவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவுடன் கோபி தொகுதியில் இருக்கும் நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார்கள்.

53 ஆண்டுகாலம் கட்சியில் இருக்கிறீர்கள் என்றால் உழைத்திருக்க வேண்டும். மக்களுக்கு, கட்சியினருக்கு உழைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களை வாழ்த்தியிருப்பார்கள். மாறாக இயக்கத்துக்கு துரோகம் செய்தால் இப்படித்தான் நிலைமை தான் கிடைக்கும். இந்த இயக்கம் சாதாரண இயக்கமல்ல, 2 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம். வேண்டுமென்றே திட்டமிட்டு இயக்கத்துக்கு எதிராகப் பேசுபவர்களை சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காது.

கொடநாடு பற்றி பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அதற்கு அதிமுக ஆட்சியில் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு குற்றம் புரிந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும், அதைத்தான் நாங்களும் செய்தோம். அதுமட்டுமில்லை, இரண்டு மூன்று கொலைகள் நடந்தது என்கிறார். என்ன ஒரு வன்மத்தனம்..? கட்சிக்குள் இவரை வைத்திருந்தால் எப்படியிருக்கும்? மனசுக்குள் ஒன்றை வைத்து வெளியில் நாடகத்தனமாக நடந்துகொள்கிறார் என்பது இதிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
(டிடிவி.தினகரன் பேட்டி கொடுத்ததை ஐபேடில் பிளே செய்து காட்டுகிறார் – & செங்கோட்டையனுடன் அடிக்கடிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று டிடிவி பேசுகிறார்) இப்படி அதிமுக தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காது. நீக்கப்பட்டவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார் செங்கோட்டையன்.

2017ல் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தில் எதிர்த்து ஓட்டுப்போட்டவர் ஓபிஎஸ். இந்த இயக்கத்துக்கு துரோகம் விளைவித்தார். பிறகு எங்களோடு இணைய வேண்டும் என்றனர், நாங்களும் இணைந்து ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைக் கொடுத்தோம். அப்படியும் மாறாக செயல்பட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். இப்படிப்பட்டவர்கள் எப்படி இயக்கத்துக்கு உண்மையாக இருப்பார்கள்..? அம்மா இருக்கும்போது பிரச்னை வந்தது வெளியில் தான் மறியல் செய்தார், உள்ளே போய் உடைக்கவில்லை. இவருக்குப் பதவி இல்லை என்றால் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது இதிலிருந்து நிரூபணமானது.

அண்மையில் ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்கள். அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் செயல்பட்டிருப்பாரா? அதுமட்டுமின்றி, சமீபத்தில் திமுக மீண்டும் ஆட்சி வரும் என்று பேட்டி கொடுக்கிறார். இவரையெல்லாம் இணைக்க வேண்டும் என்றால் எப்படி இணைக்க முடியும்?

இவர்களையெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருவதற்காக இணைக்கச் சொல்லவில்லை, திமுகவை மறைமுகமாக ஆதரித்து திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். டிடிவி அவர்கள் எங்கள் கட்சியைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர். இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் திட்டம், வேறு எதுவுமே கிடையாது.

2016ல் அம்மா ஆட்சியை அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்றவர் டிடிவி. இவர் எப்படி இந்த இயக்கத்துக்கு விசுவாசமாக இருப்பார்?

இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் காட்டப்பட்டுவிட்டனர். இன்று சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ். இதே ஓபிஎஸ் முன்னர் சமூக வலைதளங்களில் எப்படி கருத்தைப் பதிவு செய்தார் என்று சொல்கிறேன், தமிழகம் அறிந்துகொள்ள வேண்டும் (ஓபிஎஸ் ட்விட்டர் பதிவுகளைக் காண்பிக்கிறார்). 13-&02-&17 அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா பேசாதது ஏன்? 14-02-17 குற்றவாளி சசிகலா.. தப்பியது தமிழகம். அன்றைய தினமே சசிகலா உள்ளிட்ட மூவர் உடனடியாக சரணடைய உத்தரவு.

03&-03&-17 உயிருடன் இருக்கும்வரை சசிகலா உறவினர்கள் கட்சியில் அனுமதிக்க மாட்டேன் என மாண்புமிகு அம்மா அவர்கள் கூறினார்கள். இப்படியெல்லாம் கருத்தைப் போட்டுவிட்டு, இவர்கள் தான் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக்கொள்வார்கள். கட்சிக்கும் சரி அவர்களுக்குமே சரி விசுவாசமாக இருந்ததே கிடையாது. இப்படிப்பட்ட துரோகச் செயல்களில் ஈடுபட்டவர் தான் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்ஞ்’’ என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் கொடுத்தார்.

இரண்டுமுறை வாய்ப்புகள் வந்து விட்டுக்கொடுத்ததாக செங்கோட்டையன் சொல்கிறாரே?

எப்போது வாய்ப்பு வந்தது? அம்மாவே பதவியை விட்டு எடுத்துவிட்டார்களே. 2014லேயே அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்தார். நாங்கள்தான் வாய்ப்புக் கொடுத்தோம். அம்மா இருந்திருந்தால் எம்.எல்.ஏ பதவியே கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா இறந்த பின்னர் கூவத்தூரில் அவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது என்கிறாரே?
எங்க வாய்ப்புக் கிடைத்தது? இவரோட எண்ணங்கள் எல்லாம் எப்படியிருக்கிறது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எம்.எல்.ஏ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தனை பேர் அவரைத் தேர்ந்தெடுத்தனர்? இவரால் எத்தனை பேர் வெளியில் போயிருக்கிறார்கள்..? அத்தனையும் பொய் செய்திகள். செங்கோட்டையன் அப்பகுதியில் சிற்றரசர் போல நடந்துகொண்டிருந்தார். இன்று அப்பகுதி மக்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. சுதந்திரம் பெற்றிருக்கிறது. அதனால்தான் நிர்வாகிகள் எல்லாம் இனிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களைத் தற்காலிக பொதுச்செயலாளர் என்று சொல்கிறாரே செங்கோட்டையன்? சட்டரீதியாக சந்திப்பே என்கிறாரே?
ஊடகத்தினருக்குத் தெரியுமா தெரியாதா? போட்டுக்கொடுத்து வாங்க வேண்டாம். அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தெரியாதவர்களுக்கு விளக்கம் சொல்கிறேன். இதெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாகவும், தேர்தல் ஆணையத்தின் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டது. முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அவருக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார், அதையெல்லாம் கேட்க வேண்டாம். எத்தனை ஆண்டுகாலம் வழக்கு நடந்திருக்கிறது, உச்சநீதிமன்ற வழக்கு எப்படி, உயர்நீதிமன்ற வழக்கு எப்படி, தேர்தல் ஆணையம் எப்படி, எல்லாமே உங்களுக்குத் தெரியும். பொதுச்செயலாளராக தேர்வாகி 2024 தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்கள், கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் முடிவு எதை நோக்கி இருக்கிறது..? குறிப்பாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதா? அல்லது உங்களுடைய வளர்ச்சி பிடிக்கவில்லையா?

அதான் சார் பி டீம் சார். அவர்கள் எல்லாம் திமுகவுடன் ஓராண்டுக்கு முன்பாக 20 நிமிடம் தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.

நீங்க பி டீம் சொல்றீங்க, அவர் உங்களை ஏ டீம் என்கிறாரே?
நிரூபிக்கச் சொல்லுங்கள். நான் சட்டமன்றத்தில் எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர் எங்கேயாவது திமுகவை குறை சொல்லிப் பேசியிருக்கிறாரா? பொதுக்கூட்டத்திலும், ஊடகத்திலும், பத்திரிகையிலும் திமுகவை எதிர்த்து பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படி எங்கேயாவது அவர் திமுகவை தாக்கிப் பேசியிருக்கிறாரா?

நோட்டீஸ் கொடுக்காமல் நீக்கியிருப்பதாகச் சொல்கிறாரே?
அதிமுக சட்ட விதிப்படிதான் இது நடக்கிறது. அது இவருக்குத் தெரியாதா? இவர் எத்தனை பேரை நீக்குங்கள் என்று சொல்லி நீக்கியிருக்கிறோம். மேலும் கெடு எதுவும் விதிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். (செல்போனில் பழைய செங்கோட்டையன் பேட்டியை ஒளிக்கவிடுகிறார் அதில் 10 நாள் கெடு என்று சொல்கிறார் செங்கோட்டையன்). இப்ப சொல்லுங்க யார் பொய் சொல்வது யார் உண்மை சொல்வது?
ஒவ்வொரு செயல்பாடும் ஓராண்டு காலமாக சரியில்லாத சூழ்நிலைதான். ஆனாலும் பொறுத்துக்கொண்டு இருந்தோம். அதையெல்லாம் அனுசரித்துக் கொண்டுதான் இருந்தோம். இறுதியாக கட்சி விரோதச் செயலில் ஈடுபட்ட காரணத்தினால் தான் நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal