‘‘நான் திமுகவின் பி டீம் இல்லை, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 ஆக இருக்கிறார்’’ என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நேற்று செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘‘1975-ஆம் ஆண்டு அதிமுகவின் முதல் பொதுக் குழுவில் பங்கேற்றேன். முதல் பொதுக் குழு கூட்டத்தை நான் சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரிடம் பாராட்டு பெற்றேன்.

அதிமுகவுக்கு விசுவாசமுள்ள தொண்டன் என்று என்னை ஜெயலலிதா அழைத்தார். தடம் புரளாமல் சலனத்திற்கும் இடமில்லாமல் பணியாற்றினேன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன்.

தோல்வியே இல்லை என்ற நிலையில் இருந்தவர் எம்ஜிஆர். ஆனால் 2019, 2021 2024-இல் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தோற்றது.

ஈபிஎஸ்ஸுக்கு பரிந்துரைக் கடிதத்தை வெளியிட்டவன் நான்தான். தோல்விக்கு பிறகும் எடப்பாடி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. 2026 இல் அதிமுக தோற்றால் என்னை கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் நான் கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பேட்டியளித்தேன்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் 10 தொகுதிகளில் அதிமுக 3 ஆவது இடத்திற்கு சென்றது. தேவர் ஜெயந்திக்கு சென்ற போது அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசினேன். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பேச கூடிய பொறுப்பு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது என்பதால் நாங்கள் யாரும் அது குறித்து பேசாமல் இருந்தோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோயில் போன்ற அந்த பங்களாவில் என்ன நடந்தது என்பதை அறிய இதுவரை எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக்காதது ஏன்?

நான் திமுகவின் பி டீம் என்கிறார். திமுகவின் பி டீம் யார் என்பதை இந்த நாடறியும். எனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ1 -ஆக இருக்கிறார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் கேட்பது கொடநாடு கொலை, கொள்ளையில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி ஏன் குரல் கொடுக்கவில்லை’’ என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க.வின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அ.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களே எதிர்நோக்கியுள்ளனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal