முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சசிகலா பின்னால் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் உஷாரான எடப்பாடி பழனிசாமி செங்கோட்டை அ.தி.மு.க.வில் இருந்தே நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இயங்கி வருபவர்.

கடந்த செப்டம்பர் மாதம், 10 நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தார். மறுநாளேசெங்கோட்டையன் அதிமுக கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து எடப்பாடிபழனிசாமியால் விடுவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் (அக்டோபர் 30), அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அம்முக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, செங்கோட்டையன் நீக்கத்தைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் அவர்களை கழகத்திலிருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்க முடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

அன்பு சகோதரர் செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்கத் துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம். கழகத்தொண்டர்கள் பலபேர் இரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து காப்பாற்றிய இந்த இயக்கத்தை, இன்றைக்கும் கோடானு கோடி கழகத் தொண்டர்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து, கழகத்தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

இன்றைக்கு இதுதான் தமிழ் மண்ணிற்கும், தமிழக மக்களுக்கும் நாம் செய்கின்ற பேருதவியாக அமையும்.கழகம் ஒன்றிணைய வேண்டும், மீண்டும் கழக ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. தமிழக மக்களின் விருப்பமும் இதுதான். நானும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கழகம் ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் திமுக என்ற தீயசக்திக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகத்தான் கருதமுடியும்.

எனவே திமுகவின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக அனைவரும் ஓரணியில் திரள்வோம். திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா அறிக்கையின் பின்னணி குறித்து அ.தி.மு.க.வின் சீனியர்களிடம் பேசினோம், ‘‘சார், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகுதான் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் போன்றோரை அ.தி.மு.க.வில் ‘லைம் லைட்’க்கு கொண்டு வந்தார் சசிகலா. ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையணை ஓரங்கட்டிவிட்டு தோப்பு வெங்கடாச்சலத்தை கொண்டுவந்தார். டி.டி.வி.தினகரனின் சுயரூபத்தை உணர்ந்த ஜெயலலிதா அவரை கட்சியிலிருந்தே நீக்கியிருந்தார். இன்றைக்கு இவர்கள் எல்லாம் ‘நாங்கள்தான் அ.தி.மு.க…. எங்களை ஒன்றிணைத்தால்தான் வெற்றி பெற முடியும்’ என கர்ஜித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் சசிகலாவும், தி.மு.க.வும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, அ.தி.மு.க.வையும் அக்கட்சியின் பொதுச்செயலாளரையும் ‘பிளவு’ என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் அ.தி.மு.க.வினரை சோர்வடையச் செய்யும் வேலையில் சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வி. டீம் இறங்கியிருக்கிறது. இதனை தி.மு.க.விற்கு நெருக்கமான ஒரு அமைப்பும் செய்துவருகிறது. இப்படியான சூழலில் செங்கோட்டையனும் அவர்களுடன் கைகோர்த்ததால்தான், உஷாரான எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal