தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றப் பிறகு நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாக குற்ச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ‘‘சார். தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் இருந்தபோது நாடார் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எல்.முருகன் பா.ஜ.க. தலைவராக இருந்தபோதும் அதே முக்கியத்துவம் தொடர்ந்தது. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோதும், நாடார் சமுதாயத்தினர் உள்பட அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் சென்றார்.

ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகு நாடார் சமுதாயத்தினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, முக்கிய நபர்கள் உள்பட நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் பா.ஜ-.க.வின் வளர்ச்சிக்கு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் நிதியுதவி கொடுத்து வருகிறார்கள். அப்படியிருந்தும் ஏன் நாடார் சமுதாயத்தினரை நயினார் நாகேந்திரன் புறக்கணிக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது’’ என்றனர் கோபத்துடன்!

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்லையில் நடந்த பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அந்த மாநாட்டில் அண்ணாமலையின் பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் அவரது ஆதரவாளர்கள் அரங்கை அதிரவைத்து நயினார் தரப்பை உசுப்பேற்றினர். இதனைத் தொடந்து மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலையின் பெயரைச் சொன்னாலே கரவொலிகள் காதைக் கிழித்தன.

இந்த நிலையில், திருநெல்வேலியை மையமாக கொண்டு அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கி இருப்பது ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்த பிறகும் அதன் வீச்சு இன்னும் அடங்கவில்லை. நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகத்தை திறக்கவும் அதன் கிளைகளை தமிழகம் முழுமைக்கும் விரிவுபடுத்தவும் அவரது விசுவாசிகள் திட்டம் வகுத்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணிக்கெல்லாம் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள்தான் என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர் நாடார் சமுதயாத்தினர். இனியாவது அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்வாரா நயினார் நாகேந்திரன்?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal