தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாமல்லபுரத்தில் இன்று 28ம் தேதி ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தி.மு.க.வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள் மற்றும் தயாரிப்புகள் குறித்து பயிற்சி பெறுகின்றனர். இந்தப் பயிற்சி, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, வாக்குச்சாவடி அளவில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின், கூட்டத்தில் உரையாற்றியபோது, ‘‘2019 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. மகத்தான வெற்றிகளைப் பெற்று வருவதாகக் கூறினார். “2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இது ஆணவத்தில் சொல்லவில்லை, உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனைகள், மக்களின் நம்பிக்கையால் சொல்கிறேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார். ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சியை அமைப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்றும், சுணங்கி நிற்பது தேங்கலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026 தேர்தல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமானது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். “தனித்தன்மையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் நமது ஆட்சியா? அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது” என்று அவர் கேள்வி எழுப்பினார். தி.மு.க.வுக்கு மட்டுமே தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும், கலைஞரின் உடன்பிறப்புகள் நினைத்ததைச் செய்து காட்டுவார்கள் என்றும் அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
பா.ஜ.க.வை நேரடியாக விமர்சித்த ஸ்டாலின், “தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது. அவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும், ஆனாலும் புதிய குறுக்கு வழிகளைத் தேடுகின்றனர்” என்று கூறினார். இந்தப் பயிற்சிக் கூட்டம், தொண்டர்களின் உழைப்பை லட்சியத்துடன் இணைத்து, இயக்கத்தை தொடர்ந்து இயங்க வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
