காக்கா & பருந்து கதை சொல்லி விஜய்யை ஏற்கனவே ஒருமுறை சீண்டினார் நடிகர் ரஜனிகாந்த்… அதற்கு விஜய் ‘தல’ன்னா ஒருவர்தான்… கேப்டன்னா ஒருவர்தான்… தளபதின்ன… அதே போல சூப்பர் ஸ்டார்னாலும் ஒருவர்தான்… அவர் இடத்தைப் பிடிக்க யாரும் அசைப்படவில்லை என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்தார் விஜய்!

அமைச்சர் கே.என்.நேருவின் கோட்டையிலேயே நேற்று ஓட்டைப் போட்டுவிட்டு வந்திருக்கிறார் விஜய். இந்த நிலையில்தான், ‘‘பழைய எதிரிகள், – புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறாரோ, அதே அளவுக்கு அவர் தமிழ்நாடு தேர்தல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அப்படி அவர் ஏற்படுத்திய தாக்கங்களால் ஆட்சி மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவரது தாக்கம் இருக்கும் என்பது நேற்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் அப்பட்டமாக தெரிந்துள்ளது.

அதாவது நேற்று இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இத்தனைக்கும் இளையராஜா பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இப்படி இருக்கையில் கட்சி பேதமின்றி, அவருக்கு தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு பாராட்டு விழா நடத்தியது. இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் முதலைமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்திய அரசியலிலேயே ஒரு நட்சத்திரமாகவும், இந்திய நாட்டை ஆளுகின்ற கட்சிக்கும் புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, வாங்க 2026இல் பாத்துக்கலாம்’’ என, தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டு உள்ள, தமிழ்நாடு முதலமைச்சர், எனது நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்” என்று பேசத் தொடங்கினார்.

அவரது இந்த பேச்சு என்பது ஏதோ அந்த மேடைக்கு அலங்காரம் சேர்க்கும் பேச்சாக அரசியல் தளத்தில் பார்க்கப்படவில்லை. மாறாக அவர் புதிய எதிர்க்கட்சிகள் என்று நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் குறித்துதான் குறிப்பிடுகிறார். இப்படி இருக்கையில் ஏற்கனவே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே வார்த்தைப் போர் என்பது மிகவும் மூர்க்கமாக இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் அவர் இசைஞானிக்கான பாராட்டு விழாவில் தனது ரசிகர்களுக்கு ஏற்கனவே உள்ள விஜய் எதிர்ப்பு மனநிலை என்பதை கொஞ்சம் கொம்பு சீவி விட்டுள்ளார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஏற்கனவே அரசியல் கேள்விகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளிப்பதை தவிர்த்து வரும் ரஜினிகாந்த், இந்த மேடையில் முதலமைச்சருக்கு வணக்கம் வைப்பது என்பதை வேறு வகையில் செய்திருக்கலாம். ஆனால் அவர் புதிய எதிரிகள் எனக் குறிப்பிடக் காரணமே விஜய்யை அட்டாக் செய்வதற்குத்தான் என்றும் பேசி வருகிறார்கள். இவரது இந்த பேச்சு தொடர்பான யூகங்கள் பலவும் தற்போது அரசியல் தளத்திலும் சினிமாத்துறையில் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே தி.மு.க.வில் உள்ள சீனியர்களுக்கு நடிகர் ரஜிகாந்த் வைத்து முதல்வர் ஸ்டாலின் ‘செக்’ வைத்த விவகாரத்தை யாரும் மறந்துவிட முடியாது! அதாங்க ‘ஸ்கூல் பெஞ்ச்சை விட்டுப் போகாதவங்க’! இதனால் துரைமுருகன் கொந்தளித்துப் பேசி, ரஜினியிடம் மன்னிப்பு கேட்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது!

ஆக மொத்தத்தில் விஜய்க்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த்தை துருப்புச் சீட்டாக மாற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal