ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் அதிமுகவினர் தடுக்கும் நிலையில், விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் எனவும், அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலைமையும் ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் பல்வேறு புதிய வசதிகளுடன், 28.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “120 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை சைதாப்பேட்டை மக்கள் மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். கல்வியும், சுகாதாரமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று முதல்வர் கூறுவார்.

கலைஞர் ஆட்சியில் சுகாதாரத் துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்கள்தான் இன்று தமிழ்நாட்டைக் குறிப்பாக சென்னையை இந்தியாவின் மெடிக்கல் கேப்பிட்டல் என்று சொல்லும் அளவிற்குச் சொல்ல வைத்துள்ளது. மக்களுக்கு மருத்துவ சேவைகளை வீடு தேடிச் செல்ல வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பல்வேறு திசைகளில் இருந்து நம்முடைய அரசுக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐநா சபையின் விருது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளது. சுகாதாரத் துறையில் இந்தியாவுக்குத் தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது. மருத்துவத்துறையில் என்றைக்கும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று நிரூபிக்கும் அளவிற்கு நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் உள்ளார். மக்களைச் சந்திக்கிறார்.

அவர், பொதுக் கூட்டத்தில் பேசும்பொழுது அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல் என்னவெல்லாம் தடங்கல்கள் செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தார். அதற்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விரைவில் அதிமுகவை ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal