தமிழகத்தில் ஏராளமான சமுதாயங்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஜெயலலிதா காலம் வரை அரவணைக்கப்பட்டவர்கள்தான் முத்தரையர் சமுதாய மக்கள்!
எம்.ஜி.ஆரால் அரவணைக்கப்பட்ட முத்தரையர்கள் தி.மு.க.வைப் (சம்பிரதாயத்திற்காக முத்தரையர் ஒருவருக்கு தி.மு.க.வில் பதவி கொடுப்பார்கள்) புறக்கணித்தனர் என்பதுதான் வரலாறு! முத்தரையர் சமுதாயம் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, வேலூர் என 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருந்தாலும், திருச்சி, புதுக்கோட்டையில் முத்தரையர் சமுதாயத்தினர்தான் அதிகம் வசிக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி முத்தரையர் சமுதாய மக்களை புறந்தள்ளுவதாக குமுறுகிறார்கள். எடப்பாடி ஆட்சி காலத்தில் ஒரு முத்தரையர் கூட மாவட்டச் செயலாளராக இல்லை. ஏதோ, ஓ.பி.எஸ். தயவால் அப்போது திருச்சி புறநகர் வடக்கு மா.செ.வாக இருக்கும் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார். இல்லாவிட்டால் அதுவும் இல்லை.
‘முத்தரையர் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை’ என்ற ஒற்றை காரணத்தை மட்டும் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இதனை அச்சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார்கள். இது பற்றி அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அருண் நேரு போட்டியிட்டார்…. ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
அதே போல் பா.ஜ.க. கூட்டணியில் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் போட்டியிட்டார். அவரும் எவ்வளவு கொடுத்தார் என்று நாங்கள் சொல்லத் தேவையில்லை… ஆனால், எதுவுமே கொடுக்காத எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர் சந்திரமோகனை நாங்கள் இரண்டாவது இடத்திற்கு கொண்டுவந்தோம். எங்களிடையே ஒற்றுமை இல்லை என்றால், எப்படி அவர் இரண்டாவது இடத்தை பிடித்திருக்க முடியும்.
மதுரையில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதை எடப்பாடியார் மறந்துவிட்டாரா? இந்தமுறை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மாற்று சமுகத்தினருக்கும், கூட்டணி கட்சிக்கும் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வருகிறதே. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முத்தரையர்களை புறக்கணித்தால், நாங்கள் த.வெ.க.வில் தடம் பதிக்க நேரிடும்’’ என்ற எச்சரிக்கைத் தொணியில் பேசினார்கள்.
எடப்பாடி பழனிசாமி எதற்காக முத்தரையர் சமுதாய மக்களை புறக்கணிக்கிறார் என்ற கேள்விகளோடு, திருச்சியில் இருக்கும் நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். அவர்கள் சொன்னதுதான் அதிர்ச்சி தகவல்.
அதாவது, ‘‘சார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல்தான் எடப்பாடியாரும் முத்தரையர்களை அரவணைப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் முத்தரையர் சமுதாயத்தைக் கண்டுகொள்வதாக தெரிவில்லை. தவிர, இவரது நிழலாக இருப்பவர் முசிறியில் முக்கால்வாசி நேரம் இருக்கிறார். காரணம், அவருக்கு சொந்தமான கல்லூரி அங்கு இருக்கிறது. அவரும் முத்தரையர்களை புறக்கணித்து, தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
சாதாரணமாக வார்டு செயலாளர் பதவி முதற்கொண்டு மாவட்டத்தில் சில முக்கியமான பதவிகள் வரை எடப்பாடியின் ‘நிழல்’ யாரை ‘டிக்’ அடிக்கிறாரோ அவருக்குத்தான் கிடைக்கிறது. அங்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆத்தூரில் இருந்து வந்து திருச்சியில் அரசியல் செய்தால், திருச்சி அ.தி.மு.க. அதலபாதாளத்திற்கு சென்றுவிடும். இங்கு மீண்டும் 9 தொகுதிகளில் தி.மு.க. வென்றுவிடும்’’ என்றனர்.