பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் கோலோச்சி வந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டிய பணிகளை தவெக தீவிரப்படுத்தி உள்ளது. மதுரையில் பிரம்மாண்டமாக நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சி தலைவர் விஜய், விரைவில் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, தவெக-வின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியில் மக்கள் சந்திப்பை தொடங்க விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்கலாமா அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து தொடங்கலாமா என்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal