அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அதிமுக கட்சி விதிகளை திருத்தம் செய்ததை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், கே.சி. பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதற்கு ஏற்ப விதிகளை திருத்தம் செய்தது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அதிமுக தொண்டர்கள் சார்பாக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடர, ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு விசாரித்தது. சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் அதிமுக உறுப்பினர்களே இல்லை என்பதால், அதிமுக தொண்டர்கள் சார்பாக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்சியில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், வழக்கில் எழுப்பிய கோரிக்கைகள் காலாவதியாகி விட்டன என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், கட்சியின் உறுப்பினர்கள் என உரிய ஆதாரங்களுடன் தாங்கள் நிரூபித்த பிறகே, வழக்கு தொடர அனுமதியளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். தங்கள் வழக்குகள் காலாவதியாகவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்று, தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர சுரேன் பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.