‘ராகுல்காந்தியால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது. அதே போல் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது’ என அடித்துப் பேசினார் அமித் ஷா!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், பாஜக இம்முறை தென் மாவட்டங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும். பாஜக – அதிமுக கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல. இந்த கூட்டணி தமிழக மக்களின் நிலையை மேம்படுத்தும். இந்த நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி இங்கு நடக்கும் திமுகவின் ஆட்சிதான்.
மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல், இலவச வேட்டி சேலையில் ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்க வேண்டுமா? 130வது சட்டத்திருத்தத்தை கறுப்பு சட்டம் என்கிறார் ஸ்டாலின்.
அதனை சொல்ல அவருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஸ்டாலின் கறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை அறிவிக்க வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஒரே லட்சியம் தான். சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். அதேபோல் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே கனவு. இந்த இரு கனவும் பலிக்காது. ஒருநாளும் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக வர முடியாது என்று தெரிவித்தார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவிகித வாக்குகளையும், அதிமுக கூட்டணி 21 சதவிகித வாக்குகளையும் பெற்றது.
இதன் மூலமாக சட்டசபைத் தேர்தலில் எளிதாக அதிமுக – பாஜக கூட்டணி 39 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடும். இந்த வாக்குகளை இணைத்தாலே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்துவிடும். தமிழ்நாட்டில் அதிமுக – & பாஜக கூட்டணி இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைப்பது உறுதி’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி, முதல்வராக முடியாது என அமித் ஷா அடித்துப் பேசியிருப்பது பற்றி ‘மேலிட’ மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், மத்தியில் காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என அமித் ஷா நம்புகிறார். அதற்கேற்றால்போல் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களிலும் அக்கட்சியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் நாளுக்கு நாள் படுபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. காரணம், கோஷ்டி பூசல்… தலைமைக்கு எதிராக செயல்படும் மூத்த தலைவர்கள் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் மனதில் வைத்துதான் ராகுல்காந்தியால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது என அடித்துக் கூறியிருக்கிறார் அமித் ஷா!
அதே போல, தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்துதான் இன்றைக்கு முதல்வராக அமர்ந்திருக்கிறார். ஆனால், உதயநிதி ஸ்டாலின், ‘சூரிய வம்சம்’ படத்தில் ஒரே பாடலில் உச்சத்திற்கு செல்வார்களே? அதுபோலத்தான் உதயநிதியின் வளர்ச்சியும் இருக்கிறது.
முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என ஸ்டாலின் 40 வருடம் உழைத்து முன்னுக்கு வந்த நிலையை, வெறும் 4 வருடத்தில் அந்த உயரத்தை எட்டிவிட்டார் உதயநிதி. இதனை கனிமொழியும், கனிமொழி ஆதரவாளர்களும் ரசிக்கவில்லை. அண்ணனை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் கனிமொழியும், கனிமொழி ஆதரவாளர்களும் உதயநிதியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!
தவிர, உதயநிதிக்கு போட்டியாக த.வெ.க. தலைவர் விஜய் களத்தில் இறங்கியிருக்கிறார். இன்றைக்கு தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘கம்பீரமான’ பெண் அரசியல் தலைவரைப் பார்க்க முடியவில்லை. அந்தத் தலைவராக கனிமொழி உருவெடுக்கலாம். அதற்கு பா.ஜ.க.வும் உதவி செய்யலாம். இதையெல்லாம் மனதில் வைத்துதான் அமித் ஷா, ‘உதயநிதியால் ஒருபோதும் தமிழக முதல்வராக முடியாது’ என பேசியிருக்கலாம்’’ என்றனர்.