அதிமுகவில் இருந்து விலகிய மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளார். இணைந்து பத்துநாட்களில் திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அன்வர்ராஜா.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் அன்வர் ராஜா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும் அதிமுகவில் இஸ்லாமிய தலைவர்களில் முக்கிய தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துகளை அன்வர் ராஜா தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அடுத்த சில ஆண்டுகளில் பாஜகவுடன் அதிமுக உறவை முறித்துக்கொண்ட நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத அன்வர் ராஜா, கட்சி நிகழ்வில் பெரிய அளவில் கலந்து கொள்ளாலம் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஜூலை 21 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
அதிமுக-பாஜக கூட்டணியால் அதிருப்தி அடைந்திருந்த அன்வர் ராஜா, பாஜகவை விமர்சித்து வந்தார் மற்றும் அதிமுகவின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகக் கூறி, திமுகவில் இணைய முடிவு செய்தார்.
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். இந்த சூழ்நிலையில் அன்வர் ராஜாவிற்கு திமுகவில் மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த திமுக இலக்கிய அணித்தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
