‘ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் வரிசையில் அடுத்ததாக ஓ.பி.எஸ். சேர்ந்திருக்கிறார். மதுரை மாநாடு முடிந்த பிறகு தி.மு.க. கூட்டணியில் சேர இருக்கிறார்’ என்றார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.

ஓ.பி.எஸ்.ஸின் நெக்ஸ்ட் மூவ் குறித்துஅறிவாலய வட்டாரத்திலும், ஒ.பி.எஸ். தரப்பிரக்கு நெருக்கமானவர்களிடமும் பேசினோம்.
‘‘சார், அ.தி.மு.க.வில் இணைய எத்தனையோ முயற்சிகளை எடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக பா.ஜ.க.வையும், ஆடிட்டரையும் நம்பினார்…. அவர்களும் கைவிட்டுவிட்டார்கள். கடைசியில் ஓ.பி.எஸ்.ஸுக்கு அரசியல் ஆதாயத்திற்காக கைகொடுத்தது தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்தான்.
ஓ.பி.எஸ். அரசியல் முடிவை செப்டம்பர் 4-ல் மதுரையில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்பதாக ஓபிஎஸ் சொல்லியிருந்த நிலையில், தவெக பக்கம் போகலாம் என்ற அவரது சிந்தனைக்கு, ஆரம்பத்திலேயே அணைபோடவே ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பை திட்டமிட்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். தனது ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைவது ஓபிஎஸ்ஸுக்கான முதல் வாய்ப்பு.
இதன் மூலம், தான் மற்றும் தனது விசுவாசிகளின் அரசியல் எதிர்காலம் காப்பாற்றப்படும் என்பதால் இந்த முடிவுக்கு ஓபிஎஸ் உடன்பட அதிக வாய்ப்புள்ளது. அல்லது, ஆர்.எம்.வீ., திருநாவுக்கரசர் பாணியில் தனி கட்சி தொடங்கி திமுக-வுடன் கூட்டணி வைக்கலாம்.
பொதுவாக எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் திமுக பக்கம் போவதை அவர்களை பின் தொடரும் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்பார்கள். ஆனால், எம்ஜிஆரின் போர்ப்படை தளபதிகளாக விளங்கிய ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் போன்றோர் திமுக-வுடன் கூட்டணி கண்டதும் முத்துசாமியில் தொடங்கி செந்தில்பாலாஜி வரையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுக-வில் ஐக்கியமாகி அங்கேயும் அமைச்சர்களான வரலாறும் இந்த விஷயத்தில் ஓபிஎஸ் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அதோடு, ‘பாஜக-வின் வருகை திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து’ என பொதுத்தளத்திலும், ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என தன் இனத்தார் மத்தியிலும் பேசுவதற்கு வசதியாக பல தலைப்புகளும் இருப்பதால் திமுக உடனான பயணத்தில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பார்’’ என்று சொன்னவர்கள் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்!
‘‘வரும் காலங்களில் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க. எப்படி உருவானதோ… அதே போல் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் தி.மு.க.வில் இணைந்து ஒரே திராவிட இயக்கமாக வரும் காலங்களில் உருவாகும்’’ என புதிர்போட்டனர்.
