‘‘பாகிஸ்தானுக்கு பா.சிதம்பரம் நற்சான்று வழங்க விரும்புகிறார்’’என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஆவேசமாக பேசினார்.
ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் அமித்ஷா பேசியதாவது: ‘‘ஆபரேஷன் மகாதேவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தான் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த உடனே நான் ஸ்ரீநகருக்கு சென்றேன்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முக்கிய குற்றவாளி சுலைமான் கொல்லப்பட்டான். பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிடாமல் தடுத்தோம். அப்பாவி மக்களை கொன்ற 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு எம்.9 ரக துப்பாக்கி, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் போலவே, ஆபரேஷன் மகாதேவும் முழு வெற்றி அடைந்தது. ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 3பேர் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக யோசிக்க முடியாத அளவில் தாக்குதல் நடத்தி உள்ளோம்.
நீங்கள் பாகிஸ்தான் உடன் பேசி கொண்டு இருக்கிறீர்களா? பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால் எதிர்க்கட்சியினர் சந்தோஷம் அடைவார்கள் என நினைத்தேன்.
மாறாக அவர்கள் அனைவரும் சோகம் அடைந்துள்ளனர். மக்களை காக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு தான். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவர் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்கிறார். அவர் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார்.ஆனால் உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கிவிட்டார். 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
மோடி அரசு மன்மோகன் அரசைப் போல் வேடிக்கை பார்க்காது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தருகிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளோம். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படை கூட்டத்தில் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இப்பொழுது நடப்பது மோடி ஆட்சி; மன்மோகன் ஆட்சி அல்ல. பாகிஸ்தானில் அனைத்து பயங்கரவாதிகள் முகாம்களையும் அழித்துவிட்டோம். பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில், போரை நிறுத்த இந்தியா தான் முடிவு செய்தது. நேருவின் போர் நிறுத்தத்தால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்று இருந்தால் பிரச்னை வந்திருக்காது’’ இவ்வாறு அமித்ஷா பேசினார்.
