தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் முறைகேடு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
‘சிட்கோ‘ எனப்படும், சிறு தொழில்கள் மேம்பாட்டு கழக நடைமுறையின் கீழ், அதில் பணிபுரிந்த தொழிலாளி கர்ணன் என்பவருக்கு, கடந்த 1995ல் அரசு இடம் ஒதுக்கியது. அவ்வாறு ஒதுக்கிய இடத்தை யாருக்கும் விற்க கூடாது; குறிப்பிட்ட அந்த தொழிலாளருக்கு இடம் தேவையில்லை என்றால் அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
ஆனால், அந்த இடத்தை தி.மு.க., அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி சட்டவிரோதமாக வாங்கியதாகவும், இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, பார்த்திபன் என்பவர் அளித்த புகாரில், கடந்த 2019ல், சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவானது.
அப்போது, தி.மு.க., -எம்.எல்.ஏ.,வாக இருந்த சுப்பிரமணியனை விசாரிக்க, அப்போதைய சபாநாயகர் தனபால் அனுமதி அளித்ததையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. இதற்கு எதிராக, சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதலில் இடைக்கால தடை விதித்தது. பின், அந்த தடையை கடந்த மாதம் 28ல் நீக்கியது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சுப்பிரமணியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘‘சென்னை மேயராக சுப்பிரமணியன் பதவி வகித்த போது, அவர் மீது எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்த சபாநாயகர் ஒப்புதல் அளித்த நடைமுறை தவறானது. மேயரிடம் விசாரணை நடத்த, மாநில அரசிடம் தான் அனுமதி பெற வேண்டும். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும்,‘‘ என, வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: ‘‘இந்த விவகாரத்தில் மனுவில் உள்ள அம்சங்களையும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளையும் ஆராய்ந்தோம். பொது ஊழியர் ஒருவர், இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும்போது, அவர் முறைகேட்டில் ஈடுபட்டபோது என்ன பதவி வகித்தாரோ, அது தொடர்பான உரிய நபரிடம் அனுமதி பெற வேண்டுமா?
அல்லது அவர் தற்போது வகிக்கும் பதவியின் அடிப்படையில், யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ, அவர்களை அணுக வேண்டுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுகிறது. எனவே, இதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க நினைக்கிறோம். இது தொடர்பாக, எதிர் மனுதாரர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதன் பிறகு விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.
