முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவருக்கு வயது 77.
கருணாநிதி- பத்மாவதி தாயாருக்கு மூத்த மகனாக 1948ம் ஆண்டு ஜனவரி 14ல் பிறந்தவர் முத்து. தந்தை கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். 1970களில் வெளியான பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். நடிப்பு திறமையையும் கடந்து சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.
மறைந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, அவரை விட்டு பிரிந்தார். 2017ம் ஆண்டு தமது வறுமைநிலையை காரணம் கூறி, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவரும், அ.தி.மு.க., நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் அளித்து உதவினார். பல காலமாக தனித்து வாழ்ந்து வந்த மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் உடனடியாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வரும், சகோதரருமான மு.க.ஸ்டாலின்.
