‘ஊழல், முறைகேடுகளில் சிக்கி, மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஓரிரு மாதங்களில் தாங்களாகவே பதவி விலகிக்கொள்ள வேண்டும்; அலட்சியம் காட்டினால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, அவமானப்பட வேண்டிய சூழல் வரும்’ என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.

வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உள்ளனர். கடந்த, 2021ல் கைகோர்த்த அதே கட்சிகளுடன் தி.மு.க., மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது.

அதேபோல், அ.தி.மு.க.,வும் தேர்தல் கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை அ.தி.மு.க., – பா.ஜ.க, கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.

அத்துடன், த.வெ.க., – நா.த.க., ஆகிய கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., – பா.ஜ.க, கூட்டணி முயற்சித்து வருகிறது. இதனால் வரும், 2026 தேர்தல் கடும் சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை நன்கு உணர்ந்துள்ள தி.மு.க., தங்கள் கட்சியை வலுப்படுத்தும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு‘ என, உறுப்பினர்கள் சேர்க்கையை துவக்கி உள்ளது. இதுவரை, 1.35 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதேபோல், எம்.பி., – எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகள் என, பெரும்பான்மை தி.மு.க., வசம் உள்ளது. இதில், உள்ளாட்சி அமைப்புகளை ஒழுங்குப்படுத்துவதோடு, பலப்படுத்தும் வகையில், தற்போது தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.

அதன்படி, ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு, அதிக புகார்கள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை பெற்றுள்ள கவுன்சிலர்கள் பட்டியலை தி.மு.க., தலைமை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக சென்னையில், 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே போல் பிற மாவட்டங்களிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய சேர்மன்கன் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் தலைமைக்கு தகவல்கள் சென்றிருக்கிறது.

குறிப்பாக, சாலை பணிகள், மழைநீர் வடிகால்வாய் பணிகள், கேபிள் பதிப்பு போன்ற திட்ட பணிகளுக்கு கமிஷன் பெறுதல், புதிதாக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான வரைபட அனுமதி மற்றும் பழைய கட்டட இடித்தலுக்கான அனுமதி ஆகியவற்றிலும், கவுன்சிலர்கள் லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கை குறித்து அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், சென்னை மாநகரில் மட்டும் கவுன்சிலர்கள் அடாவடியில் இறங்கவில்லை. ஏன் மதுரை மாநகராட்சியில் மண்டல குழுத் தலைவர்கள் கூண்டோடு பதவி விலகவில்லையா? கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பெண் சேர்மன்களின் கணவன் மார்கள் மீது புகார் எழுந்திருக்கிறது.

குறிப்பாக திருச்சி புறநகர் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பெண் சேர்மன்களின் கணவர்கள் மீது தலைமைக்கு குற்றச்சாட்டுகள் பறந்த வண்ணம் உள்ளது. பெண் சேர்மன்களின் கணவர்கள் டெண்டர் விவகாரத்தில் பி.டி.ஓ.வை மிரட்டி எல்லா டெண்டர்களையும் அவர்களே பெற்று மற்றவர்களை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் செய்து வருகிறார்களாம்.

அப்படி டெண்டர் பெற்று தரமான சாலைகளையோ, கால்வாய்களையோ அமைத்திருக்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது. இன்றும் ஆறு மாதங்களில் அவர்கள் செய்த வேலையின் லட்சணம் தெரியும். தவிர, அடிதடி, கொலை மிரட்டல்கள் விடுவதிலும் சிலர் ஈடுபடுவதாக தலைமைக்கு புகார் வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் தகவல்கள் வந்திருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் மாவட்ட அமைச்சர்கள் அந்தந்த கவுன்சிலர்களையும், சேர்மன்களின் கணவர்களையும் காப்பாற்றும் விதமாக செயல்பட்டால், சீனியர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும் ஸ்டாலினின் கோபப்பார்வை படும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal