தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக எம்பி கல்யாணசுந்தரத்தின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொகுதி நிலவரங்களை ஆராய்ந்து வருகிறது. இதற்காக கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகம் வரை ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில் முதல் ஆளாக அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். ஒவ்வொரு தொகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இதே போல திமுகவும் கட்சி நிர்வாகிகளை திமுக தலைமை அலுவலகத்திற்கு அழைத்து ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்தி வருகிறது
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மீது அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரையில் மண்டல குழு உறுப்பினர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரையும் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போல பல உட்கட்சி பிரச்சனைகளை கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், திமுக எம்பியான கல்யாண சுந்தரத்தின் செயல்பாடுகளுக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக எம்பியான கல்யாண சுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பை திமுக தலைமை பறித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் உத்தரவின் பேரில் வெளியாகியுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ., (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
