‘எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கண்டு உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது. திமுக 10 சதவீதம் வாக்குகளை இழந்துள்ள நிலையில் 10 நாட்களில் 91 லட்சம் உறுப்பினர் சேர்த்தோம் என்று கூறுவது யாரை ஏமாற்ற? 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது போல 2026 தேர்தலில் நிலை ஏற்படும்’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் பா டாக்டர் சரவணன் கடும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் பா .டாக்டர் சரவணன் பேசும்போது, ‘‘கடந்த 7 ம் தேதி முதல் கோவையில் இருந்து கழகப் பொதுச் எடப்பாடியார் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை துவக்கி உள்ளார். செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் அலை போல திரண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கிறார்கள். இன்றைக்கு தமிழக முழுவதும் எடப்பாடியார் அலை வீசுகிறது இதைக் கண்டு ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டது, அவரது மகன் உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது. இதன் மூலம் தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள நாள்தோறும் பல்வேறு தவறான தகவலை ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் பரப்பி வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பாக முகவர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியாரின் தலைமையிலான கூட்டணி டெபாசிட் வாங்க முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல ஒரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர்கள் சேர்க்கையில் கடந்த பத்து நாட்களில் 91 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளார்கள் என்று மிகப் பெரிய பொய்புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டார்.
இன்றைக்கு தமிழகத்தில் 6 கோடி மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இதில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக உள்ளனர், மேலும் எடப்பாடியாரின எழுச்சி பயணத்தின் மூலம் ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எடப்பாடியாருக்கு ஆதரவளிக்கும் நிலை உருவாகிவிட்டது இதையெல்லாம் உளவுத்துறை மூலம் அறிந்த திமுக வட்டாரம் அதிர்ந்தே போய் உள்ளது.
இன்றைக்கு திமுக கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதலில் 10 சகவீதம் கூட நிறைவேற்றவில்லை குறிப்பாக பெண்களுக்கு 100 ரூபாய் கேஸ் மானியம், மாணவர்கள் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து இதுபோன்று எதையும் நிறைவேற்றவில்லை, குறிப்பாக மக்கள் அன்றாடம் சமைக்கும் சமையல் பொருள்கள் கூட 30 சகவீதம் விலைவாசி உயர்வை தந்துவிட்டார்கள் இதன் மூலம் திமுகவுக்கு 10 சகவீதம் வாக்குகள் சரிந்து விட்டது என்ற உண்மை நிலை தற்போது வெளிவந்துள்ளது.
அதனால்தான் தாங்கள் செய்த தவறை மடைமாற்றம் செய்து, பொதுமக்கள் திமுக மீது மதிப்பை இருப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்க ஒரணியில தமிழகம் என்ற உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு ஸ்டிக்கரை மட்டும் வீட்டு வாசலில் ஒட்டி வைத்து அதை உறுப்பினர் சேர்க்கை என்று கணக்கு எடுத்துக் கொள்கிறார்கள், வீட்டு வாசலில் ஸ்டிக்கரை பார்த்து அதிர்ந்த மக்கள் அதை உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர் என்பது கூட திமுகவிற்கு நன்கு தெரியும். ஸ்டிக்கரை மட்டும் வைத்துக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை என்பது யாரை ஏமாற்ற?
ஏற்கனவே எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை தற்போது ஸ்டிக்கர் ஒட்டி அரசியல் செய்யும் திமுக இதிலும் ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுகிறது, இது ஒரு தவறான புள்ளி விவரம் தான்.
இன்றைக்கு ஸ்டாலின் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசுவதால் 2011 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து இழந்தை போல 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும், தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி நிச்சயம் மலரும் இனிமேல் திமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது’’ என கூறினார்.
