கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ்க்கு கேட்டு பெற வேண்டும் என மாவட்ட தலைவரிடம் நிர்வாகிகள் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கிராம காங்கிரஸ் கமிட்டி மற்றும் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களிடத்தில் நிர்வாகிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா, பூந்துறை அரச்சலூர் ரோடு ஹேப்பி ஹாலில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் கடந்த 8ம் தேதி (நேற்று) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் அனைவரும் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சர்ருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அந்த தொகுதியை மீண்டும் அவர்களே எடுத்துக்கொண்ட இந்த சூழ்நிலையில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி மு க தலைமையிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு பெற வேண்டும்.
இதை மாவட்ட தலைவர் மாநில தலைவர் இடத்தில் வலியுறுத்த வேண்டுமெனவும், இந்த தொகுதியில் முன்பு காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. எனவே இந்த தொகுதியை வருகிற 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு பெற வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலோடு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில்மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் பேசுகையில், ‘‘வருகிற ஜூலை மாதம் 27-ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு கிராமமாக நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் மக்கள் விரோத பாரதிய ஜனதா அரசை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்வது. மேலும் வருகிற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணியை எவ்வாறு ஜெயிக்க வைக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் கேட்டு அறியப்படும்.
தமிழகத்தில் கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசுவை இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம். மேலும் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்தை மாநில தலைவர் இடத்தில் தெரிவிப்பதாகவும்’’ பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், செந்தில் ராஜா, வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ரவி, கதிர்வேல் மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
