“என்ன பாவம் செய்தது சாஸ்திரி ரோடு..?திருச்சி ம. நீ. ம. வழக்கறிஞர் வேதனை.

Uncategorized
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் சிதிலமடைந்த சாலைகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தாலும், அதிகாரிகள் மட்டத்தில் அதிலும் ஓரவஞ்சனை காட்டுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், திருச்சி மாநகராட்சி ஆணையரின் பேரில்லம் அமைந்துள்ள தில்லை நகர் பகுதியில் சாலைக் குறைபாடுகள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவற்றை உடனுக்குடன் சரி செய்யும் அதிகாரிகள், பிற பகுதிகளை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது. அந்த வகையில், தில்லை நகரை ஒட்டியுள்ள சாஸ்திரி சாலையும் புறக்கணிக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளரும், வழக்கறிஞருமான கிஷோர் குமார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘திருச்சி தில்லைநகர் சாலை முழுவதும் மேற்கு புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர உரை கிணறுகள் மேல் மூடிபோடாமல், மண் மூடி, உடைந்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதசாரிகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்திற்குள்ளாவதை ஆதாரபூர்வமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் சுட்டிகாட்டியிந்தோம். இதனை தொடர்ந்து மாற்று திட்டமாக சாலையோர உரை கிணறுகளில் திருச்சி மாநகராட்சி சார்பில் மேற்படி சாலையில் கூண்டுடன் கூடிய செடி வைக்க திட்டம் வகுக்கப்பட்டது. மரமும் நடப்பட்டது வரவேற்க்கதக்க ஒன்று.

ஆனால், தற்பொழுது திருச்சி தில்லைநகரின் மற்றொரு போக்குவரத்து நெரிசல் பகுதியான சாஸ்திரி ரோட்டில் கிழக்கு பக்கத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல இலட்ச ரூபாய் மக்கள் வரிப் பணத்தில் சாலையோர உரை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உரை கிணறுகளுக்கும் மேல் மூடி கிடையாது. பல உரை கிணறுகள் சாலை மட்டத்திற்கு மண் சேர்ந்து உடைந்து சேதமாகியுள்ளது.

ஆனால், தில்லைநகர் சாலையோர உரை கிணறுகளில் கூண்டுடன் செடி வைத்து மாற்றியமைக்கப்பட்டது போன்று சாஸ்திரி ரோடு சாலையோர உரைகிணறுகள் மாற்றியமைக்கப்படவில்லை என்பது வேதனை.

அதே நேரத்தில், ‘தில்லைநகரை போன்று சாஸ்திரி ரோடு சாலையோர உரை கிணறுகளில் மரம் ஏற்படுத்தாதது ஏன்?’ என்ற நியாயமான கேள்விக்கு பதில் இல்லை.

எனவே, திருச்சி மாநகராட்சி தில்லைநகர் மேற்கு புறத்தில் சாலையோர உரை கிணறு திட்டத்தை மாற்றி கூண்டுடன் கூடிய செடி நடப்பட்டதோ, அதே போன்று சாஸ்திரி ரோடு கிழக்கு புறத்திலுள்ள உரை கிணறுகளில் கூண்டுடன் கூடிய செடி நடவேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களையும், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஊராக உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார்.