ராம்குமார் வழக்கு: மனித உரிமை ஆணையத்தின் முன் அதிகாரிகள் ஆஜர்!

Uncategorized
  •  
  •  
  •  
  •  

சென்னை ,

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது முதல் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது வரை முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016 ஜூன் மாதம் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு சுவாதியின் பின்னால் நின்றிருந்த மர்மநபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடல் 3 மணி நேரமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திலேயே இருந்தது. காலை 9 மணிக்கு பின்னரே ரயில்வே காவல் துறையினர் சுவாதியின் உடலை அப்புறப்படுத்தினர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில் சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது.

போலீஸார் அந்த நபர் தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களில் வெளியிட்டனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சவுராஷ்டிரா நகரில் உள்ள மற்றொரு வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. சுவாதி படுகொலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.

சுவாதி படு கொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடமிருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுவாதியின் செல்போன் உரையாடல்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.

பின்னர் சுவாதியின் பேஸ்புக் அக்கவுண்ட் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டது. சுவாதியின் படுகொலையில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக நடிகர்கள் ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர் ஆகியோர் ஃபேஸ்புக் பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் தப்பி ஓடிய நபர்தான் கொலையாளி என தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ். சுவாதி செல்போன் கடைசியாக சூளைமேட்டில் சிக்னலில் இயங்கியது. பின்னர் கொலையாளி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மேன்சனில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேன்சன் காவலாளி மற்றும் மேனேஜர் அளித்த தகவலின் பேரில் குற்றவாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என உறுதியானது.

செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அன்று காலை முதல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குற்றவாளி ராம்குமாரை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். ஆடு மேய்த்து விட்டு மாலையில் வீடு கொலையாளி ராம்குமார் வீடு திரும்பிய பின்னரும் போலீஸார் கண்காணித்தனர். பின்னர் இரவு 10 மணியளவில் ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயற்சித்த பொது போலீசாரை பார்த்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டது. சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராம்குமார், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பேசினார். போலீஸார் நடத்திய விசாரணையில் ராம்குமார், சுவாதியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சென்னை அழைத்துவரப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் வெளிவர நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ராம்குமார் மரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நான்காண்டு காலமாக அமைதியாக ஆறப்போடப்பட்டிருந்த ராம்குமார் மரண வழக்கு கடந்த ஆண்டு மீண்டும் உயிர்பெற்றது. மனித உரிமைகள் ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோர் மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் ராம்குமார் தற்கொலை வழக்கு மனித உரிமை கமிஷன் உறுப்பினர் துறையிடம் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற புழல் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் வேணு ஆனந்த், ஆண்டாள் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது .


28-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 4 வருடங்களாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த இந்த மரண வழக்கு மீண்டும் குறுக்கு விசாரணையில் உயிர் பெற்றுள்ளது.