மீண்டும் தடதடக்க தயாராகும் பயணிகள் ரயில்கள்

அரசியல்
  •  
  •  
  •  
  •  

ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம். பி. வெங்கடேசன் நன்றி.

கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், குறைந்த தொலைவிலான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல், நீண்ட தூர கோவிட் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், குறைந்த தூர பயணத்திற்காக பாசஞ்சர் ரயில்களை நம்பியிருந்த நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் குறைந்த தூர பேசஞ்சர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம். பி.யான சு. வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில், ரயில்வே வாரியத்திற்கு நன்றி கூறி இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார் எம். பி. வெங்கடேசன்.

அதில், ‘இந்திய ரயில்வே, சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல், இருப்பதால்
இந்திய ரயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.
இதனை சுட்டிக்காட்டி, அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். ரயில்வே அமைச்சரை, நானும் வடசென்னை எம் .பி. கலாநதி வீராச்சாமியும் நேரில் வலியுறுத்தினோம்.
இப்போது ,ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்துஅதிகாரிகளை பயணி வண்டிகளையும், பாரம்பரிய பழைய பயணி வண்டிகளையும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும், அவற்றுக்கான கால அட்டவணைகளை 16. 8. 2021 குள் அனுப்பி வைத்திடவும் ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளது.

தெற்கு ரயில் வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார் .
அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
விரைந்து பயணி வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
ரயில்வே அமைச்சருக்கு, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.