திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர்.
அப்போது, தரிசனம் முடிந்து வந்த அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது பேசிய அண்ணாமலை, “புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தரவேண்டும் என்பது மரபு.இருப்பினும் திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது. இனிப்பு என்னவென்றால், மத்திய அரசுடன் இணைந்து இரண்டாம் அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்னவென்றால் ஒன்றிய அரசின் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அனேக இடங்களில் பாஜ தொண்டர்களை கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வழக்கை மீண்டும் கையிலெடுப்பது போல தோன்றுகிறது. இதுபோலவே ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் விட்டுவிட்டு, கொரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 54 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2.5 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார் அண்ணாமலை.

By admin