திரைப்பட அவதூறு வழக்கு:இயக்குனர் பாலா விடுவிப்பு

சினிமா
  •  
  •  
  •  
  •  

அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கில் இருந்து இயக்குனர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘அவன்-இவன்’. இந்தப் படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் குறித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக, சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன், தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு  தொடர்ந்தார். இதனையடுத்து கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்துடன் சமாதானம் பேசி தன்னை வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.

வழக்கின் விசாரணை அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை பெற்றனர். இதனால் சில ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெறாமல் இருந்தது. தடை நீங்கிய நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

இந்த சூழலில் வழக்கு விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்த நிலையில் நடிகர் ஆர்யா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குனர் பாலா மீது மட்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத இயக்குனர் பாலா இன்று நடைபெறும் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பிற்கு  கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பாலா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் முன்பு இன்று ஆஜரானார். வழக்கு தொடர்ந்தவர்கள் குற்றத்தை சரியாக நிரூபிக்காததால், இயக்குனர் பாலாவை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும் ஜமீன் முருகேச தீர்த்தபதி குறித்தும் அவர்களது குலதெய்வம் சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் அவன் இவன் திரைப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை. எனவே வழக்கிலிருந்து பாலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.