விஷாலுக்கு எதிரான லைகா மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

சினிமா
  •  
  •  
  •  
  •  

சென்னை:

நடிகர் விஷாலுக்கு எதிராக, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, மருது திரைப்பட தயாரிப்புக்காக, கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம், 21.29 கோடி ரூபாயை, நடிகர் விஷால் கடனாக பெற்றார். அதை திருப்பிச் செலுத்த முடியாததால், தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி, அன்புச்செழியனிடம் தான் பெற்ற கடனை அடைக்குமாறு, விஷால் கோரிஉள்ளார். அதன்படி விஷாலின் கடனை, லைகா நிறுவனம் அடைத்துள்ளது.

இதையடுத்து, 2019 செப்., 21ல் லைகா நிறுவனத்துடன், நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, லைகா நிறுவனத்துக்கு 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடன், தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.இதன்படி, துப்பறிவாளன் – 2 திரைப்படம் வெளியான பின், 2020 மார்ச்சில், 7 கோடி ரூபாயும், மீதத் தொகையை, 2020 டிசம்பருக்குள் செலுத்தி விடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.லைகா பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், விஷால் பதில் அளிக்கவில்லை. மொத்தமாக, 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க, விஷாலுக்கு உத்தரவிடக் கோரி, லைகா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு: துப்பறிவாளன் – 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது முழு தொகையையும் கோரி, படத்தின் வெளியீட்டிற்கு முன் வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது. எனவே, லைகாவின் மனு, 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..