‘‘திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லு முல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மலிந்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

ஏற்கெனவே டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் “திமுக அமைச்சர் கே.என்.நேரு மீதான 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி உத்தரவு பிறப்பித்திருப்பது, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

ஆதாரங்கள் கையில் இருந்தும் கூட, எந்தத் தவறுமே செய்யாதது போல முதல்வர் ஸ்டாலின் நடித்துக் கொண்டிருந்தார். இனி திமுகவின் ஊழல் அமைச்சர்கள் யாரும் நீதியின் முன் தப்பிக்க முடியாது! “ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக” என்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்த வெற்று விளம்பர ‘மாடல்’ திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கும், ஊழல் திமுக அமைச்சர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வதற்கும் காலம் கனிந்துவிட்டது முதல்வர் அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal