ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் மக்களை சந்திக்க பல்வேறு வகைகளைக் கையாளுகின்றன.
திமுக, ஓரணியில் தமிழ்நாடு எனும் திட்டத்தின்படி வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, திமுக அரசின் திட்டங்களைக் குறித்து எடுத்துக்கூறுவது, குறைகள் இருந்தால் கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் சுற்றுப் பயணத்தைத் துவங்கி அதன் மூலம், ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று சட்டமன்றத் தொகுதி மக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக அரசில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் குறித்து விமர்சித்துவருகிறார்.
பாமகவில் தற்போது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை நேற்று துவங்கிய நிலையில், அதற்கு தடை விதிக்க காவல்துறையிடம் முறையிட்டார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
இப்படி ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திவரும் சூழலில், ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடல்நலப் பிரச்சனையின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடியே தனது அரசுப் பணியை மேற்கொண்டுவருகிறார். அதேபோல், கட்சிப் பணியையும் அங்கிருந்தபடியே அவர் மேற்கொண்டுவருகிறார்.
அந்த வரிசையில், திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக மண்டல உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அப்போலோ மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
